ஒருசமயம் இராஜேந்திர சோழன் இப்பகுதிக்கு வரும்போது, இறைவன் பொன்உடும்பு வடிவில் தோன்றி ஓடி ஒரு புற்றில் சென்று மறைந்தார். உடன் வந்த வீரர்கள் புற்றைத் தோண்ட குருதி வெளிப்பட்டது. சோழ மன்னன் கலங்கி இறைவனை வேண்ட, அவரும் உடும்பு வடிவில் வந்தது தாமே என்றும், அங்கு ஒரு கோயில் எழுப்புமாறும் அசரீரியாக அருளினார். அதனால் இத்தலத்து மூலவர் உடும்பு வடிவில் காட்சி தருகின்றார்.
மாக்கிரகன் என்னும் அசுரன் இத்தலத்து இறைவனை வழிபட்டதால் இத்தலத்து இறைவன் மாக்கிரகீஸ்வரர் என்ற நாமம் பெற்று, பின்னர் மருவி 'மாகறலீஸ்வரர்' என்று மாறியது. அதனால் இத்தலமும் 'மாகறல்' என்ற பெயர் பெற்றது.
மூலவர் 'திருமாகறலீஸ்வரர்' அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். பெரிய ஆவுடை, உடும்பு வடிவ மெல்லிய பாணம். இவருக்கு அடைக்கலம் காத்த நாதர், உடும்பீசர், புற்றிடம் கொண்டார், அகத்தீஸ்வரர் ஆகிய திருநாமங்கள் உண்டு. அம்பாள் 'திரிபுவன நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நடராஜர், அறுபத்து மூவர், பைரவர், நவக்கிரகங்கள் தரிசனம் தருகின்றனர். இத்தலத்தில் முருகப்பெருமான் யானை மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது அபூர்வமான ஒன்றாகும்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|